July 21, 2020

430 வகை வாழை சாம்ராஜ்யம்

60 வயது வினோத் சகாதேவன் நாயர். கேரளாவின் திருவனந்தபுரத்தில் உள்ள பாரசாலா என்ற கிராமத்தில் உள்ள தன்னுடைய 3 ஏக்கர் நிலத்தில் ஒரு வாழை சாம்ராஜ்யத்தை நிர்மாணித்துள்ளார்.

கடந்த 30 ஆண்டு காலத்தில் 430க்கு மேற்பட்ட வாழை வகைகளை பயிர் செய்துள்ளார்.இந்தியா முழுவதுமான வகைகள் மட்டுமல்ல பல வெளிநாட்டு வகைகளையும் பயிர் செய்துள்ளனர்.

அசாம் மாநிலத்தை சேர்ந்த உயரமான வாழைகள் முதல் குட்டையான ஜஹான்ஜீ (Jahanji) வாழைகள் வரை உள்ளன மேலும் வெளிநாட்டு வகைகளான வெண்டை வாழை (Lady`s Finger), சிவப்பு வாழை மற்றும் நீல ஜாவா(Blue jawa) இவற்றுள் அடங்கும்.

வினோத் சகாதேவன் 12 வயதிலிருந்தே தனது தந்தைக்கு உதவியாக விவசாயத்தில் ஈடுபட்டு வந்துள்ளார கல்லூரியில் பௌதிகத்தில் பட்டப்படிப்பை முடித்த பின்னர் (Bsc, physics) சிறிது காலம் தனியார் துறையிலும் பின்னர் கொச்சியில் கணினி வலைதள வடிவமைப்பு (web designing) செய்து வந்தவர் தனது தாயார் காலமானதால் தந்தையை கவனிக்க சொந்த ஊர் பாராசாலா வந்தார் விவசாயத்தின் மீது கொண்ட பற்றினால் மீண்டும் ஒரு முழுநேர விவசாயியாக மாறினார். தந்தையார் நிர்மாணித்த வாழை விவசாயத்தில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டார்.
வழக்கமான வாழை விவசாயிகள் போல் இல்லாமல் தனித்துவமான வாழை விவசாயியாக திகழ வேண்டும் என்று எண்ணி முதலில் இந்தியாவில் பல பகுதிகளில் உள்ள வாழை வகைகளை வளர்க்க விரும்பினார்.அதற்காக குஜராத், கர்நாடகா, மகாராஷ்டிரா,ஆந்திரா, தமிழ்நாடு, வங்காளம், ஒரிசா அசாம் ,மணிப்பூர் மாநிலங்களுக்கு பயணம் செய்து பல்வேறு வாழை வகைகளை கொண்டு வந்து வளர்க்கத் தொடங்கினார்.அனைத்து வகைகளும் கேரளா மக்கள் அதுவரை பார்த்திராதது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியாவில் உள்ள தோட்டக்கலை துறைகள் (Horticulture Department), ஆராய்ச்சி நிலையங்கள் (Research Institutes), பல்கலைக்கழகங்கள் (Universities) ஆகியவற்றின் உதவியை நாடினார்.பெரும்பாலான இடங்களில் உதவி கிடைக்கவில்லை என்றாலும் வினோத் மகாதேவனின் தேடுதல் பல வெளிநாடுகளுக்கு
பயணிக்கவைத்தது மலேசியா, ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, ஹொண்டுரஸ் ஆகிய நாடுகளிலிருந்து கேரளாவின் கடற்கரை சூழலுக்கு ஏற்ற வாழை வகைகளை கொண்டுவந்து பயிர் செய்துள்ளார் என்பது அதிசயிக்கும் வகையில் உள்ளது என்றால் மிகையல்ல.

அசாமில் சில வாழை வகைகள் விதைகள் உடையது என்பது விந்தை.வேறு எங்கும் விதை உள்ள வாழையை பார்க்க முடியாது. ஒட்டாமுங்லி (Ottamungli), காரிங்கதலி (Karingadali) சூரிய கதலி (Surya Kadali) மற்றும் மலையில் உள்ள பழங்குடி மக்களின் வாழை இனங்களும் இவரது வாழை பண்ணையில் உள்ளன. பல இடங்களில் வாழை ஒரு சமையல் காய்கறி ஆகவே பயன்படுத்தப்படுகிறது என்று கூறும் இவர் கன்னியாகுமரியின் "மனோரஞ்சிதம்" என்ற மணம் வீசும் வாழையை பற்றியும் கூறத்தவறவில்லை.இன்றும் கன்னியாகுமரியில் அனைத்து விசேஷங்களிலும் கோவில்களிலும் நல்ல வாசனைக் காகவே தொங்கவிடப்படுகின்றது என கூறுகிறார்.

வினோத் சகாதேவன் 2015 - ல் - லிம்கா சாதனை புத்தகத்தில் சாதனை விவசாயியாக இடம் பெற்றுள்ளார் மற்றும் (ICAR-National Research centre) தேசிய விவசாய ஆராய்ச்சி நிறுவனத்தின் சிறந்த விவசாய சான்றிதழையும், கேடயத்தையும் பெற்றுள்ளனர்.

தற்போது M.Tech பட்டதாரியான அவரது மகன் V.Ambaneesh (அம்பனிஷ்) தந்தையுடன் இணைந்து வாழையில் இருந்து மதிப்பு கூட்டிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்த முயற்சி செய்து வருகிறார்.

பாரா சாலா கிராமத்தின் சிறு குழந்தைகள் கூட வினோத் சகாதேவனை வாழை சேட்டன் (Vazha Chettan) என்று தன்னை அழைப்பது மிகப் பெருமையாக உள்ளது என்று கூறுகிறார்.வாழை சாம்ராஜ்யம் உருவாக்கிய வாழை மனிதன் வினோத் அவ்வாறு அழைக்கப்படுவது பாராட்ட தக்கதே.

பின்குறிப்பு - இதில் பதிவிட்ட தகவல்கள் அணைத்தும் இணையத்தளத்தில் இருந்து சேகரிக்கப்பட்டவை. இனி வரும் காலங்களில் காணொலிகளுக்காக இத்தகவல்களை ஆய்வுக்கு உட்படுத்தும் போது குறிப்புகளில் மாற்றங்கள் வரலாம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

Stories