September 03, 2020

இளநீர் மட்டையில் ஒரு சிக்கன பசுமைக்குடில்

தேங்காய் மற்றும் இளநீர் நமது வாழ்க்கையில் அன்றாடம் பயன்படும் உணவுப் பொருட்களாக உள்ளன. ஆசியா-பசிபிக் தேங்காய் உபயோகிப்பாளர் (Asian and Pacific Coconut Communities (APCC) கணக்கெடுப்பின்படி இந்தியாவில் 21,665 மில்லியன் அளவுக்கு உற்பத்தி செய்து உலகில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.

வருடம் முழுவதும் இளநீர் மக்களால் விரும்பி குடிக்கப்படும் பானமாக இருந்து வருகிறது. இளநீர் குடித்தபின் கழிவு செய்யப்படும் மட்டைகள் பல டன்கள் சேகரமாகின்றன. இளநீர் மட்டைகள் இயற்கையாகவே மட்கி எருவாகி போனாலும் அதற்கான காலம் மிக அதிகமாக உள்ளது. அதுவரையில் இளநீர் மட்டைகள் மலைபோல் குவியும் குப்பையாகவும் கொசுக்களை உற்பத்தி செய்யும் தண்ணீர் தேங்கிய பாத்திரங்களாகவும் ஆகின்றன. சுற்றுச்சூழலை பெருமளவு பாதிக்கும் பொருளாக இருக்கின்றது.

டன் கணக்கில் சேரும் இளநீர் மட்டைகளை பயனுள்ள வகையில் உபயோகப்படுத்த பல முயற்சிகள் செய்யப்பட்டு வருகின்றன. இளநீர் கூடுகளை செடிகள் வளர்க்கும் தொட்டிகளாகவும், உடைக்கப்பட்டு தூளாக்கப்பட்ட மட்டைகள் நாற்றுகள் வளர்க்கும் பொருளாகவம் (Mulching) எருவாகவும் காயவைத்து நாரெடுத்து கயிர்களாகவும் திரிக்க பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த வரிசையில் ஒரு வித்தியாசமான முயற்சியாக இளநீர் மட்டைகள் சிக்கனமான பசுமைக்குடில் அமைப்பதில் மனிஷ் அத்வானி (Manish Advani) மற்றும் ஜேநில் திரிவேதி (Jayneel Trivedi) நண்பர்கள் முன்னெடுத்து செய்துள்ளனர். விற்பனை அதிகாரியான (Marketing Professional) மணிஷ் அத்வானியும் கட்டிட வடிவமைப்பாளரான (Architect) ஜேநில் திரிவேதியும் தங்களது முயற்சியில் வெற்றி அடைந்துள்ளனர்.

முயற்சிக்கு உதவியாக மும்பையின் சோமையா கல்லூரியைச் சேர்ந்த 20 மாணவர்களை தெரிவு செய்து இளநீர் மட்டைகளை சேகரிக்கவும்,18 நாள் வரையில் சூரிய ஒளியில் உலர வைக்கவும் பயன்படுத்தப்பட்டுள்ளனர். கட்டிட வடிவமைப்பாளர் வழிகாட்டுதலின்படி மூங்கில், பழைய மரஜன்னல்கள், கதவுகள் மற்றும் மண் சுண்ணாம்புக் கலவையை பயன்படுத்தி இளநீர் மட்டைகளுக்கு வலிமை சேர்த்து கட்டியுள்ளனர். மேலும் பக்கச்சுவர்களில் பயன்படுத்தப்பட்டுள்ள இளநீர் மட்டைகளில் செடிகளும் வளரும்படி செய்துள்ளனர் என்பது இந்த பசுமை குடிலின் சிறப்பு.

இளநீர் பசுமை குடிலில் இயற்கையான காற்றோட்டம் இருப்பதால் குடிலின் உள்ளே குளிர்ந்த வெப்பநிலையே இருக்கிறது. தனியான குளிர் சாதனங்கள் (Air Conditioner) தேவையில்லை என்று கூறுகிறார் கட்டிட வடிவமைப்பாளர் ஜேநில் திரிவேதி. எளிமையான இந்த பசுமை வீட்டினை கட்ட ரூ 10,000/- மட்டுமே செலவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நண்பர்கள் இருவரின் இந்த முயற்சிக்காக சிறந்த சுற்றுச்சூழல் பாதுகாப்பு பயன்பாட்டு முறை என்ற பன்னாட்டு பசுமை ஆப்பிள் வெண்கல விருது (International Green Apple Award) லண்டனில் நடத்தப்பட்ட ஒரு நிகழ்வில் வழங்கப்பட்டது.

பின்குறிப்பு - இதில் பதிவிட்ட தகவல்கள் அணைத்தும் இணையத்தளத்தில் இருந்து சேகரிக்கப்பட்டவை. இனி வரும் காலங்களில் காணொலிகளுக்காக இத்தகவல்களை ஆய்வுக்கு உட்படுத்தும் போது குறிப்புகளில் மாற்றங்கள் வரலாம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

 
Stories