திரு.C. பாண்டியன், தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர். தனது 10 ஏக்கர் நிலத்தில் "அதிசய புல்" என அழைக்கப்படும் வெட்டிவேர் புல்லினை பயிர்செய்து நல்லதொரு வருமானத்தை ஈட்டி வருகிறார்.
ஹார்வர்ட் (Harvard) பல்கலைக்கழகம் உட்பட பல வெளிநாட்டு மற்றும் இந்திய விஞ்ஞானிகள் பலர் வெட்டிவேரின் பலவிதமான பயன்களைப் பற்றி தொடர்ந்து ஆராய்ச்சிகளை மேற்கொண்டுள்ளனர். இந்தியாவை தாயகமாகக் கொண்டுள்ள வெட்டிவேர் புல் பொதுவாக கடற்கரை ஓரங்களிலும், ஆற்றோரங்களிலும் தானாகவே வளர்ந்து காணப்படுவது. தற்சமயம் விவசாய நிலங்களிலேயே பயிர் செய்யப்பட்டு அதன் வேர்கள் பலவாறாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
வெட்டிவேர்:
வெட்டிவேர் ( Chrysopogon Zizanioides) என்பது புல் வகையைச் சேர்ந்த ஒரு தாவரம். இந்தியாவை தாயகமாக கொண்ட இந்த புல் ஒன்றரை மீட்டர் உயரம் வரை வளரக்கூடியது. நீண்ட தண்டையும், தாள்களையும் கொண்ட இதன் பூக்கள் பழுப்பு கலந்த ஊதா நிறத்தில் இருக்கும். இதன் வேர் இரண்டிலிருந்து நான்கு மீட்டர் வரை வளர்கிறது விலாமிச்சை வேர் பாதுகாக்கப்படவேண்டிய ஒரு அற்புதமானவேராக கருதப்படுகிறது.
வெட்டி வேரின் வேறு பெயர்கள்:
விழல் வேர், வீரணம், குரு வேர், இருவேலி போன்ற வேறு பெயர்களைக் கொண்டது. புல்லுக்கும் வேருக்கும் இடைப்பட்டதண்டுப் பகுதியை வெட்டி எடுத்து பயிரிடப்படுவதால் "வெட்டிவேர்" என்றும் ஆற்றின் இரு கரையிலும் வளர்ந்து வேலியாக அமைந்து மண்ணரிப்பை தடுப்பதால் "இருவேலி" என்றும் அழைக்கப்படுகிறது
வெட்டிவேரின் பொதுப்பயன்கள்:
1. மண்ணரிப்பை தடுக்கிறது
2. நறுமண எண்ணெய் தயாரிக்க பயன்படுகிறது
3. தெற்காசியா, தென்கிழக்கு ஆசியா, இந்தியா ஆகிய நாடுகளில் மருத்துவப் பொருளாக பயன்படுகிறது.
மருத்துவப் பயன்கள்:
1.வெட்டிவேர் உடலின் வேர்வையும் சிறுநீரையும் பெருக்கி வெப்பத்தை அகற்றி உடலை குளிர்விக்கிறது.
2. தண்ணீரில் வெட்டி வேரை சேர்ப்பதால் கிருமிகள் அழிந்து நீர் சுத்தமாகும். நல்ல மணமாகவும் இருக்கிறது.
3. கோடைகாலத்தில் ஏற்படும் நீர் கடுப்பு, தேகஎரிச்சல் வயிற்றுக்கடுப்பு ஆகியவற்றை தீர்க்கும்.
4. முகத்தில் ஏற்படும் பருக்களை கட்டுப்படுத்துகிறது
5. சளி மற்றும் சுவாசக் கோளாறுகளுக்கு நல்ல மருந்து
6. பாக்டீரியாக்களால் ஏற்படும் சரும நோய்கனளப் போக்கி ரத்தத்தில் வெள்ளை அணுக்கள் மற்றும் பிளேட்லெட்டுகளை அதிகரிக்கிறது.
7. வெட்டி வேரில் இருக்கும் சிக்காட்ரி ஷன்ட் என்னும் வேதிப்பொருள் உடலில் வடுக்கள் மறைவதை புதிய திசுக்கள் வளர்வதன் மூலம் துரிதப்படுத்துகிறது.
8. தூக்கமின்மையால் அவதிப்படுபவர்களுக்கு மன அமைதிப் படுத்தி நல்ல உறக்கத்தைத் தரவல்லது.
9. கோடைகாலத்தில் வெட்டி வேரைக் கொண்டு செய்யப்படும் தட்டிகளை ஜன்னல்களில் கட்டி நீர் தெளித்து வர அறையின் வெப்பத்தை குறைத்து மனஅழுத்தத்தையும் வெப்பத்தையும் குறைக்கிறது.
வருமானக் கணக்கு:
வெட்டிவேரானது பொதுவாக அதிகஅளவில் ஆற்றங்கரையோரம் அதிகம் வளர்ந்தாலும் பயிர் செய்து வளர்க்கும் போது ஏக்கருக்கு ஒன்றரை லட்சம் டன்கள் வரையில் அறுவடை செய்ய முடியும்.
சராசரியாக ஒரு கிலோ வெட்டி வேரிலிருந்து 300 கிராம் வெட்டிவேர் எண்ணெய் எடுக்க முடிகிறது. அதாவது வேரின் எடையில் ஏறத்தாழ 30% என்னை பெறலாம்.
ஒரு கிலோ எண்ணெய்யின் சந்தை விலை தற்போது ரூ. 30,000 முதல் ரூ 58,000 / - வரையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் வெட்டிவேர் செடியின் பல் மற்றும் தண்டுப் பகுதியிலிருந்து எத்தனால் (Ethanol) எடுக்கவும் கால்நடை தீவன பயன்பாட்டிற்கும் விற்கப்படுவதன் மூலம் கூடுதல் வருமானம் ஈட்ட முடிகிறது என்பது கூடுதல் தகவல்.
சாதாரணமாக பாரம்பரிய முறையில் நெல், கரும்பு, பருப்பு, பருத்தி, பழங்கள், காய்கறிகள் பயிரிட்டு விவசாயம் செய்வது
மட்டுமல்லாமல் திரு.C. பாண்டியன் அவர்கள் போல் புதுமையான முறையில் வெட்டிவேர் செடிகளை வளர்த்து வருமானம் பெறுவது ஒரு மாற்று ஏற்பாடு அல்லவா ?!
விவசாயி C. பாண்டியன் போன்றோர் பல்கி பெருகி ! விவசாயம் மேலும்
தழைக்கட்டும்!!
பின்குறிப்பு - இதில் பதிவிட்ட தகவல்கள் அணைத்தும் இணையத்தளத்தில் இருந்து சேகரிக்கப்பட்டவை. இனி வரும் காலங்களில் காணொலிகளுக்காக இத்தகவல்களை ஆய்வுக்கு உட்படுத்தும் போது குறிப்புகளில் மாற்றங்கள் வரலாம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.