September 05, 2020

ஜுகாத் (Jugaad) வெங்காய சேமிப்பு முறை

பொதுவாக வெங்காயம் கோடை மாதங்களான மார்ச் - ஏப்ரல், மே மாதங்களில் அறுவடை செய்யப்படுகிறது. அதிகமான வெங்காய வரத்து இருப்பதால் விவசாயிகள் மிக குறைந்த விலையில் விற்க நேரிட்டு பெருத்த நஷ்டத்துக்கு உள்ளாகின்றனர்.

ஆனால் அக்டோபர் நவம்பர் மாதங்களில் பத்து மடங்கு வரையில் விலை உயர்வடைகிறது. அதுவரையில் வெங்காயத்தை பாதுகாத்து வைக்க சரியான கிடங்குகள் கிராமங்களில் இல்லாததால் சேமித்து வைக்க முடிவதில்லை அல்லது சேமித்து வைக்கப்பட்ட வெங்காயம் 50 சதவீதம் வரை அழகி விவசாயிகளுக்கு இழப்பை ஏற்படுத்துகிறது.

இழப்பினை தவிர்த்து விவசாயிகளுக்கு சரியான விலை கிடைக்க "ஜுகாத்" (Jugaad) என்ற வெங்காய சேமிப்பு முறையை மத்தியபிரதேசத்தில், ஜாபுவா
(Jhabua) கிராமத்தைச் சேர்ந்த ரோஹித் பட்டேல் (Rohith Patel) என்ற 21 வயது விவசாய இளைஞர் கண்டுபிடித்து வெங்காயத்தினை சேமித்து சரியான நேரத்தில் சரியான விலையில் விற்று நியாயமான  லாபத்தினை ஈட்டுகிறார்.திரு. ரோஹித் பட்டேல் வெங்காய சேமிப்பு கிடங்கு செயல்படும் முறை:

கிடங்கு 600 சதுர அடி பரப்பளவு கொண்டது சுமார் 50 டன் வெங்காயம் சேமிக்க வல்லது. தரையில் 15 சென்டி மீட்டர் உயரம் கொண்ட செங்கற்கள்
அடிக்கு ஒரு கல் என்ற அளவில் அடுக்கி வைக்கப்பட்டு அதன் மேல் கம்பிவலை பரப்பி வைக்கப்படுகிறது. 100 சதுர அடிக்கு ஒன்றாக இரண்டு பக்கமும் திறந்துள்ள இரண்டு அடி அகலமும் 5 அடி உயரமும் உள்ள குழாய்களை நிறுத்தி அதன் மேல் பகுதியில் மின் விசிறிகளை பொருத்தவேண்டும். 50 டன் வெங்காயத்தை கம்பி வலையில் மீது பரவலாக வைக்க வேண்டும். அதன் பிறகு அனைத்து மின்விசிறி களையும் இயக்கும்போது உலர்ந்த காற்று அடியில் சென்று கம்பிகளின் மீது உள்ள வெங்காயத்தின் இடையில் சென்று பாழாவதைத் தடுக்கிறது.

கிடங்கின் அளவினை எந்த அளவிற்கு தேவையோ அந்த அளவிற்கு விரிவாக்கம் செய்து கொள்ளலாம் இதன் மூலம் 6 மாதங்கள் வரையில் தரம் குறையாமல் வெங்காயம் பாதுகாக்கப்பட்டு நல்ல விலையில் விற்பனை               செய்து விவசாயிகள் லாபம் ஈட்ட முடிகிறது.

ஒவ்வொரு ஆண்டும் வெங்காய விலை வீழ்ச்சியும் வரலாறு காணாத விலை உயர்வு ஏற்படுவதால் விவசாயின் கடின உழைப்பால் விளைவிக்கப்பட்டு வெங்காயத்தினை லாபகரமாக விற்பனை செய்ய "ஜுகாத்” (Jugaad) சேமிப்பு முறை பேரு உதவி புரிகிறது என்றால் மிகையல்ல.

உலகத்தின் வெங்காய உற்பத்தியில் இரண்டாம் இடத்திலுள்ள இந்தியா இத்தகைய சேமிப்பு முறைகளால் 50 சதவீதம் வரையில் இழப்பினை குறைக்க முடிகிறது என்பது குறிப்பிடத்தக்கது. விவசாயின் வாழ்க்கைத் தரம் உயர இத்தகைய எளிய கண்டுபிடிப்புகள் தொடர்க!

"விவசாயி”:

பருவம் தவறாமல், பகிர்ந்து அளித்தல், பாதுகாத்தல், உழைத்து வாழ்தல் போன்றவை உயர்ந்த மனநிலையின் உன்னத வெளிப்பாடு. இது வேளாண்மையின் அடிப்படைத் தத்துவம் தன் நிலத்திடம் உழவன் பொறுமையையும் விடாமுயற்சியையும் சமாதானத்தையும் அமைதியையும் தோல்வியை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்தையும் கழனிக் கல்வியாக கற்றுக் கொள்கின்றான், மற்றவருக்குக் கற்றுக் கொடுக்கிறான்".

பின்குறிப்பு - இதில் பதிவிட்ட தகவல்கள் அணைத்தும் இணையத்தளத்தில் இருந்து சேகரிக்கப்பட்டவை. இனி வரும் காலங்களில் காணொலிகளுக்காக இத்தகவல்களை ஆய்வுக்கு உட்படுத்தும் போது குறிப்புகளில் மாற்றங்கள் வரலாம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

 
Stories