September 28, 2020

தனித்துவமான மூங்கில் வீடு

சுவீடன் நாட்டைச் சேர்ந்த லைனஸ் கெண்டால் (Linus Kendall) மேற்கு வங்கத்தின் ரூப்ஸா நாத் (Rupsa nath) தம்பதியினரின் "கஞ்ச்சா பாகா" (Kancha - Paka) என்ற பெயர் கொண்ட வீடு உருகுலைய செய்யும் ஆம்பன் புயல் (Cyclone Amphan) தாக்குதலை தாங்கியபடி நின்றது. அந்த மாநிலத்தின் மண்,மூங்கில் மற்றும் வைக்கோல் கொண்டு கட்டப்பட்ட அவர்களின் வீட்டினைக் காண மேற்கு வங்க மக்கள் திரண்டு நின்று வியந்து பார்த்தனர் என்பது குறிப்பிடதக்கது.

லைனஸ் கெண்டால் - ரூப்ஸா நாத் தம்பதியின் தனித்துவமான வீடு 1800 சதுர அடி விஸ்தீரணத்தில் மேற்குவங்க பிராந்திய கட்டிட நிர்மாண கலையும் நவீன கட்டிட நிர்மாண கலையும்  கலந்து கட்டப்பட்டுள்ளது அதன் சிறப்பாக கருதப்படுகிறது. அந்தப் பகுதியில் அடிக்கடி வெள்ளப் பெருக்கும் தண்ணீர் தங்குதலும் ஏற்படுகின்றபடியால் தரையிலிருந்து 10 அடி உயர்த்தி அஸ்திவாரம் போடப்பட்டு வீடு கட்டப்பட்டுள்ளது. வீட்டின் தரை தளம் வழக்கமான RCC கான்கிரீட் தரையாகவும் முதல் தளம் மண் மற்றும் மூங்கிலை கொண்டு அமைந்துள்ளது. இங்கு எங்கும் இரும்போ அல்லது மற்ற உலோகங்களோ பயன்படுத்தப்படாமல் மூங்கில்கள் அனைத்தும் கயிறு கொண்டு இருக்கி அமைக்கப்பட்டுள்ளது. பக்கவாட்டு சுவர்கள் அனைத்தும் மண் கலவையாலும் மூங்கில்களாலும் கட்டப்பட்டுள்ளது,கூரை வைக்கோல் மற்றும் கீற்றுகள் கொண்டு வேயப்பட்டு சணல் கயிறுகளால் நெருங்க கட்டப்பட்டுள்ளது. வைக்கோல் மற்றும் கீற்றுகள் சுமார் ஒன்றறை அடி தடிமனாக கட்டப்பட்டுள்ளதால் தண்ணீர் ஒழுகுதல் முற்றிலுமாக தவிர்க்கப்பட்டுள்ளது.


வீடு கட்டிடக்கலை நிபுணர் லாரண்ட் (Laurant) என்பவராலும் சமையலறை மற்றும் கழிவறை புகழ்பெற்ற சுற்றுச்சூழவியலாளர்  டாக்டர் தெபால் தெப் (Dr. Depal Dep) என்பவர் வடிவமைப்பிலும் உருவாக்கப்பட்டுள்ளது. சமையலறை தண்ணீர் சரளைக்கற்கள் மற்றும் மணல் மூலமாக சுத்திகரிக்கப்பட்டு தோட்டத்துக்கு பாயும் வகையில் உள்ளது. கழிவறையின் கழிவுகள் நேரடியாக கம்போஸ்ட் உரமாக மாற்றும் வகையில் உள்ளது.

வீட்டின் சிறப்புகள்

1. வீட்டினுள்ளே அனைத்து சுவர்களிலும் உள்ள சாதாரணமான சுண்ணாம்பு பூச்சு வீட்டின் உள்ளே ஈரப்பதம் குறைந்த அளவிலேயே வைக்க உதவுகிறது எங்கும் ரசாயன பூச்சுகள் கிடையாது.

2.சுண்ணாம்பு பூச்சு வீட்டின் உள்ளே பூஞ்சாணம் (Anti Fungal) பிடிக்காமல் பாதுகாக்கிறது.

3. தெற்கு நோக்கிய வாசல்கள் மற்றும் ஜன்னல்கள் இருப்பதால் தெற்கு காற்று வீசி வீடு முழுவதும் காற்றோட்ட வசதி பெற்று வெப்பம் குறைக்கப்படுகிறது.

4. சமையலறை, கழிவறை கழிவுகள் அனைத்தும் மறுசுழற்சி செய்யப்படுகிறது.

5. வீட்டுக் கூரை மேல் நிர்மாணித்து உள்ள சூரிய ஒளி தட்டுகள் (Solar Panels) வீட்டின் பகல் நேர மின்சார தேவைகளை முழுமையாக பூர்த்தி செய்கிறது.

6. மீள்தன்மையுள்ள  (Resilient)மூங்கில்களைக் கொண்டு வீடு அமைத்திருப்பதால் நில அதிர்வுகளை (Earth quake) தாங்குகிறது.

7.உள்வீட்டு வசதி தேவைப் பொருட்கள் உட்பட 1800 சதுர அடி வீடு கட்டும் செலவு சுமார் 50 லட்சம் மட்டுமே.


இத்தகைய வீடு மிகச்சிறந்த,குறை சொல்ல முடியாத,நிகரற்ற, மிகஉத்தமமான வீடு என்று கூறவரவில்லை.மாற்றாக இந்த வீடு சுற்றியுள்ள சாதாரணமாக அந்தப் பகுதியில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு சுற்றுச்சூழல் பாதிக்காமல் கட்டப்பட்டுள்ள ஒரு இயற்கை வீடு என்று லைனஸ் கண்டால் தன்னடக்கத்துடன் கூறுகிறார்.

Stories