April 12, 2022

ஆகாயத்தாமரை வைத்து இலவச கேஸ் (Free Gas From Water Hyacinth)

ஏரிகள், நீர்த்தேக்கங்கள், ஓடைகள், வடிகால்களை ஆக்கிரமிப்பு செய்யும் ஆகாயத்தாமரை அல்லது நீர் பதுமராகம், அல்லது water Hyacinth என்னும் களைகளைப் பயன்படுத்தி வீடுகளுக்கு தேவையான உயிர் எரிவாயுவை (Bio - Gas) உற்பத்தி செய்து பயன்படுத்தக்கூடிய வகையில் குடும்பங்களுக்கு உதவுகிறார் கேரளாவைச் சேர்ந்த திரு.G. அனூப்.

"பாயல் ஜவாலா" (Payal Jwala) என்ற சமுதாயத்திற்கு நன்மை பயக்கும் ஒரு நிறுவனமாக 2021 - ல் துவங்கப்பட்ட இந்நிறுவனம் கேரளாவின் சேர்த்தலாவை தலைமையிடமாகக் கொண்ட ஒரு தொடக்க நிறுவனம் (Start up Company). இது CRAR (Center for research on Aquatic Resources) ன் ஆதரவுடன் செயல்படுகிறது.



ஆகாயத்தாமரை, அல்லது தண்ணீர் தாமரை அல்லது water Hyacinth எனும் களைகள் பெருமளவில் நீர்நிலைகள் மற்றும் நீரோடைகளை ஆக்கிரமித்து பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன இவை அபரிமிதமான ஆக்கிரமிப்பு களைகளில் ஒன்றாகும். அதிக தாவர வளர்ச்சி மற்றும் ஏரிகள், குளங்கள், நீர் வழித்தடங்கள் ஆகியவற்றில் வேகமாக பரவும் திறன் காரணமாக இது ஒரு அச்சுறுத்தலாகவே கருதப்படுகிறது. இது தண்ணீரின் ஆக்ஸிஜன் அளவை குறைத்து அதன் மூலம் நீர்வாழ் உயிரினங்களை கொன்று கொசு உற்பத்திக்கு உகந்த வாழ்விடத்தை உருவாகிறது. மேலும் கால் வாய்களின் நீர் ஓட்டத்தையும் பெருமளவு தடுக்கிறது.

ஆய்வுகளின் படி மீத்தேன் அதிக அளவில் இருப்பதால் உயிர் வாயுவை (Bio - Gas) உருவாக்க இது ஒரு நல்ல அடி மூலக்கூறு (Basic Substrate) ஆகும். உலகத்தின் பல பகுதிகளில் ஆகாயத்தாமரை மூலம் பயோ-கேஸ் உற்பத்தி பயன்படுத்தப்பட்டு வந்தாலும் இந்தியாவில் இந்த முயற்சி ஆரம்ப நிலையிலேயே உள்ளது. இந்த வழியில் பயோகேஸ் உருவாக்குவது ஆக்கிரமிப்புகளை கட்டுப்படுத்துவது மட்டுமல்லாமல் படிம எரிவாயு பயன்படுத்துதலை குறைக்கவும் உதவுகிறது.



இதுவரை, கேரளா தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் ஆந்திரா போன்ற அண்டை மாநிலங்களில் 250-க்கும் மேற்பட்ட பயோகேஸ் ஆலைகளை ஆகாயத்தாமரை மற்றும் சமையலறை கழிவுகளைக் கொண்டு உயிர் எரிவாய்வு உற்பத்தி செய்யும் வகையில் அமைந்துள்ளது "பாயல் ஜ்வாலா" நிறுவனம்.

ஏற்கனவே உள்ள உயிர்வாயு ஆலைகளை போதுமான அடி மூலக்கூறுகள் இல்லாததால் பயன்படுத்தாமல் உள்ளன அவைகளை, நீர்வாழ்களைகளான ஆகாயத்தாமரை களைகளை அடி மூலக்கூறாக பயன்படுத்தும் வகையில் மறு சீரமைக்க "பாயல் ஜவாலா" நிறுவனம் உதவியுள்ளது.

பயோகேஸ் ஆலைகளை வெவ்வேறு அளவுகளில் மற்றும் எரிவாயு தேவைக்கேற்ப அமைக்கலாம். வீடுகளுக்கான அடிப்படை ஒன்றை ரூ. 10,000 முதல் ரூ 15,000 செலவில் அமைக்கலாம். அளவு மற்றும் கொள்ளளவு அடிப்படையில் சில லட்சங்கள் வரையில் செலவு பிடிக்கும்.

எல்.பி.ஜி எரிவாயு சிலிண்டர் விலை அடிக்கடி வானளவு உயர்த்தப்படுவதால் மக்கள் மாற்று வழிகளைத் தேடத் தொடங்கியுள்ளனர். எனவே சமீபகாலமாக சுற்றுச்சூழலுக்கு உகந்த இதுபோன்ற உயிர்வாயு ஆலைகளை அமைப்பதில் அதிக தேவை உள்ளது என்பதே யதார்த்தம்.

தகவலுக்கு

ஜி. ஆனுப் - 8129100968

பின்குறிப்பு - இதில் பதிவிட்ட தகவல்கள் அணைத்தும் இணையத்தளத்தில் இருந்து சேகரிக்கப்பட்டவை. இனி வரும் காலங்களில் காணொலிகளுக்காக இத்தகவல்களை ஆய்வுக்கு உட்படுத்தும் போது குறிப்புகளில் மாற்றங்கள் வரலாம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

Stories