July 26, 2020

மூங்கில் டிபன் பாக்ஸ்

இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூர். இங்கு வாழும் 27 வயதான ஜிங்கன்பாவு (Ginkhanpau) சிறுவயது முதலே மணிப்பூர் காடுகளில் சுற்றித்திரிந்தவர்.வனத்தில் புல் வகையை சேர்ந்த மூங்கில்கள்  விரவிக்கிடப்பவை. மணிப்பூர் மக்களின் அன்றாட வாழ்க்கையில் ஒரு அங்கமாக இருப்பதையும் பார்த்தவர் முதன்முதலில் மூங்கில் கைத்தடியை தயாரித்து கால் ஊனமுற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கினார்.

தனது 12 வது வகுப்பு கல்வியை முடித்தவுடன் மூங்கிலைக் கொண்டு அழகிய வேலைப்பாடு மிக்க கலைப்பொருட்களையும் மிகவும் பயன்பாடுள்ள மூங்கில் பொருட்களையும் தயாரிக்க துவங்கினார்.


இதற்காக வணிக தோழனான கோலன் சுவான்சா மங் நவ்லாக் (Golan Suanza mung Naulak) என்பவரை இணைத்துக்கொண்டு "ஜோகம் பேம்பூ ஒர்க்ஸ்" (Zogam Bamboo works) என்ற நிறுவனத்தை மணிப்பூரில் உள்ள சுராசந்த்பூர் (Chura Chandpur) என்ற மாவட்டத்தில் துவங்கினார்.

இந்த நிறுவனத்தில் ஆரம்பத்தில் மூங்கில் பேனா, தண்ணீர் பாட்டில்கள், கலை நுணுக்கத்துடன் கூடிய மூங்கில் கலைப்பொருட்களை தயாரித்தார். இந்த வரிசையில் அண்மை கண்டுபிடிப்பு தயாரிப்பான தனித்தன்மை வாய்ந்த மூங்கில் டிபன் பாக்ஸ் சேர்ந்துள்ளது. சுற்றுசூழல் பாதுகாப்பான" மூங்கில் டிபன் பாக்ஸ்" பற்றி வனப்பாதுகாவலர் சுதா ராமன் (IFS) அவர்கள் சிறப்பித்து தனது முகநூலில் வெளியிட்ட பிறகு மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது.இது போன்ற வன விளை பொருட்களை பயனுள்ள வகையில் தயாரித்து கொடுப்பதன் மூலம் சுற்றுச்சூழல் பெருமளவு பாதுகாக்கப்படுகிறது என்பது நிதர்சனம்.

மேலும் வனங்களிலும், வனம் சார்ந்த பகுதிகளிலும் வாழும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மற்றும் மத்திய நிலை குடும்பங்களுக்கு சிறந்த வாழ்வாதாரமாகவும் அமைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.



தற்போது மூங்கில் "டிபன் பாக்ஸ்" கள் திட உணவுகளுக்கு ஒரு வகையிலும் திரவ உணவுகளுக்கு ஒரு வகையிலும் தயாரிக்கப்படுகிறது. சிலவகை உயர்தரமான மூங்கில் வகைகளில் தயாரிக்கப்படும் டிபன் பாக்ஸ்கள் சூடான உணவு சூடாகவும், குளிர்ந்த உணவுகளை குளிர்ந்த நிலையிலும் இருக்கும்படி தயாரிக்கப்படுகிறது.

மூன்றாண்டு நீடித்து உழைக்கக்கூடிய "மூங்கில் டிபன் பாக்ஸ்" கள் வழக்கமான உலோக டிபன்பாக்ஸ்களுக்கு பதிலாகவோ (Replacement) பிளாஸ்டிக் டிபன் பாக்ஸ்களுக்கு பதிலாகவோ உபயோகிக்க சொல்ல வரவில்லை. மாறாக இவை ஒரு மாறுபட்ட ஏற்பாடாக (Alternate) கொள்ளலாம் என்று கூறுகின்றனர் ஜிங்கன்பாவு மற்றும் கோலன்.

ஸ்தாபகர் ஜிங்கன்பாவு மூங்கில் பொருட்களின் வடிவமைப்பு மற்றும் உற்பத்தியையும் கூட்டாளி கோலன் வணிகம் மற்றும் விற்பனையும் கவனித்துக் கொள்கின்றனர்.

தற்சமயம் திட உணவுகள் "மூங்கில் டிபன் பாக்ஸ்" ஒன்று ரூ 599 ஆகவும், திரவ உணவு மூங்கில் "டிபன் பாக்ஸ்" ஒன்று ரூ 799 ஆகவும் உள்ளது.



உபயோகிப்பாளர்களான நாம் சுற்றுச்சூழல் பாதுகாப்பிலும் அக்கறை உள்ளவர்கள் என்ற அடிப்படையில் "மூங்கில் டிபன் பாக்ஸ்"  ஐ போன்ற பொருட்களை பயன்படுத்தி இயற்கையோடு இயைந்த வாழ்க்கையை வாழ விழைதல் நல்லதுதானே?

பின்குறிப்பு - இதில் பதிவிட்ட தகவல்கள் அணைத்தும் இணையத்தளத்தில் இருந்து சேகரிக்கப்பட்டவை. இனி வரும் காலங்களில் காணொலிகளுக்காக இத்தகவல்களை ஆய்வுக்கு உட்படுத்தும் போது குறிப்புகளில் மாற்றங்கள் வரலாம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

Stories