December 22, 2020

தனித்துவமான உள்நாட்டு பால் குளிரூட்டும் வாளி. (Unique Indigenous Milk Chilling Unit)

உலகிலேயே இந்தியா பால் உற்பத்தியில் முதல் இடத்தை வகிக்கிறது. உலகின் கால்நடைகளில் மூன்றில் ஒரு பங்கு இந்தியாவில் மட்டுமே உள்ளது என்பது இதற்கு முக்கியமான காரணம் ஆனால் உற்பத்தி செய்யப்படும் பாலில் பல லட்சம் லிட்டர் ஆண்டுதோறும் வீணாகிறது என்பது வேதனையான உண்மை. இதற்கு முக்கியமான காரணம் பால் குளிரூட்டப்படாமல் கெட்டுப் போவது தான். கறந்தபால் சுமார் 37 டிகிரி வெப்பத்தில் அதிகபட்சமாக 5 அல்லது 6 மணி நேரம் கெட்டுப் போகாமல் இருக்கும். அதன்பிறகு படிப்படியாக கெடத்துவங்கும். கறந்தபால் உடனடியாக விவசாய பால் உற்பத்தியாளர்களோ, கிராமங்களிலோ குளிரூட்டத் தேவையான உபகரணங்கள் இல்லாததால் பால் உற்பத்தியாளர்களுக்கு பால்கெடுவதால் பொருளாதாரரீதியாக பெருத்த இழப்பு ஏற்படுகிறது.



இந்த பிரச்சனைக்கு தீர்வாக பீகார் மாநிலத்தின் சாம்பரான் மாவட்டத்தைச் சேர்ந்த திரு.ரவி பிரகாஷ் (Dr.Ravi Prakash)   29 வயதான முனைவர் பட்டம் (Ph.D) பெற்றவர். தனித்துவமான உள்நாட்டு பால் குளிரூட்டும் வாளியைக் (Unique Indigenous Milk Chilling Unit) கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளார். இந்தப் பால் வாளி (Pail) அரை மணி நேரத்தில் 37 டிகிரி வெப்பமான பாலை 7 டிகிரிக்கு குளிரூட் படுகிறது.

இத்தகைய பால் குளிரூட்டும் அமைப்பினை தனது சொந்த முதலீட்டிலும் பெங்களூரு தேசிய பால்வள ஆராய்ச்சி நிலையத்தின் (National Dairy Research Institute (NDRI), Bangalore) பொருளாதார உதவி யினையும் பயன்படுத்தி வடிவமைத்துள்ளார். இதனை பால் உற்பத்தி செய்யும் விவசாயிகள் அளவிலேயே பயன்படுத்த முடியும். மின்சார வசதி தேவையில்லை என்பது கூடுதல் அனுகூலம்.


திரு.ரவி பிரகாஷ் (Mr.Ravi Prakash) அவர்களின் இந்த கண்டுபிடிப்பிற்காக 2019 - ஆம் ஆண்டில் பிரேசில் தலைநகர் ரியோ டி ஜெனீரோ (Rio de Janeiro) இளம் விஞ்ஞானிகள் அமைப்பு (4th BRICS Young Scientist Forum (YSF) முதல் பரிசாக தெரிவு செய்யப்பட்டு  25,000 /- அமெரிக்க டாலரும், பட்டயமும் அளித்து கவுரவப்படுத்தியுள்ளது.

பால் குளிரூட்டும் தனித்துவமான வாளி (Pail) செயல்படும் முறை:

பால் கறக்கப்படும் வாளி துருப்பிடிக்காத ஸ்டீல் இரும்பினால் தயாரிக்கப்பட்டு அதில் உள்ள சார்ஜர்கள் மின்சாரம் உள்ளபோதே சார்ஜ் செய்யப்படுகிறது. இவ்வாறு சார்ஜ் செய்யப்பட்ட வாளியில் பால் கறக்கும்போதே பால் குளிரூட்டல் நடைபெறுகிறது. சார்ஜ் என்பது தெர்மல் எனர்ஜி ஸ்டோரேஜ் அடிப்படையில் வேலை செய்கிறது. அதாவது மிக முன்னேறிய கண்டுபிடிப்பான நேனோ தொழில் நுட்ப அடிப்படையில்
(Nano Fluid based Technology) ல் செயல்படுகிறது. நேனோ திரவம் (Nano Fluid)
என்பது தண்ணீரிலோ, எத்திலீன் க்ளை காலிலோ அல்லது எண்ணையிலோ உலோகத்தினால் ஆன மிக நுண்ணிய துகள்களை கலந்து உருவாக்கப்படுகிறது. இவை வெப்பக் கடத்தியாக செயல்பட்டு பால் குளிரூட்டப் படுகிறது. இதனை தேவையான போதெல்லாம் ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். இந்த தனித்தன்மையான வாளி ஒருமுறை முதலீடாக ரூ 10,000 / - மட்டுமே என்று கூறுகிறார் திரு. ரவி பிரகாஷ்.

நானோ டெக்னாலஜி (Nano Technology) பற்றிய ஒரு அறிமுகம்:

நானோ டெக்னாலஜி நுட்பத்திலும் நுட்பமான ஏறக்குறைய அணுவின் மூலக்கூறு அளவுக்குக்கு சிறிது படுத்தப்பட்ட விந்தை உலகம் பற்றியது.

இந்த புதிய தொழில்நுட்பம் பற்றி நாம் தெரிந்து கொள்ளாவிட்டால் சதா மெகா
சீரியல் அரை மயக்க நிலையிலும், நடிகர், நடிகைகளின் கிசுகிசுப்பில் மட்டுமே ஆழ்ந்திருப்போம் உலகம் நம்மை புறக்கணித்து விட்டு எங்கோ ஓடிப் போய்விடும். இந்த விந்தை உலகில் நமக்கு தேவைப்படும் அனுமதிச் சீட்டு… அறிவியல் ஆர்வம் மட்டுமே!

நானோ மீட்டர் என்பது ஒரு மீட்டரில் 100 கோடி பாகம் அதாவது ஒரு மீட்டரில் பில்லியன் பகுதி. பில்லியன் என்பது 1000 மில்லியன். அதிநுட்பமான பரிமாணம் தான்.

" அணுவைக் கூறியிட்ட காணிலும் உளன்" என்று சொன்ன கம்பர் தான் முதல் நானோ டெக்னாலஜிஸ்ட் என்று கூறலாம். மேலும் விளங்கச் சொன்னால் ஒரு நானோ மீட்டர் என்பது 10 ஹைட்ரஜன் அணுக்களை பக்கத்தில் வைத்தால் கிடைக்கும் நீளம். ஒரு குண்டூசி முனையின் 10 லட்சத்தில் ஒரு பங்கு. படிப்படியாக அளவு குறைந்து கொண்டே போய் ஒரு தனிப்பட்ட எலக்ட்ரானை நம் இஷ்டப்படி நடத்துவதுதான் இந்த இயலின் (Nano Technology) குறிக்கோள்.

1974 - ல் நோரியோ தனிகுச்சி என்கிற ஜப்பானியர் ஒரு மைக்ரானுக்கு குறைவான நுட்பமான விஷயங்களை உற்பத்தி செய்வதை “நானோ டெக்னாலஜி” என்று பெயரிட்டார். அதிலிருந்து தான் நானோ டெக்னாலஜி என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.

நானோ டெக்னாலஜியின் ஆதாரசாகசம் அணு அளவில் பொருட்களை நம் இஷ்டப்படி மாற்றுவது. ஒரு பொருளின் அணுக்கட்டடத்தை மாற்றினால் அந்த பொருளின் இயற்கை மாறிவிடும். உதாரணமாக அடுப்புக்கரியின் அணுக்கட்டைமைச் சற்று மாற்றினால் அது வைரமாகிறது.

அதேபோல் சிலிக்கான் தனிமத்தின் கட்டமைப்பை மாற்றி அதனுடன் சில சேர்மானங்கைளைக் கட்டுப்படுத்தப்பட்ட அளவில் சேர்த்து குறிப்பிட்ட முறையில் வடிவமைத்தால் அது கம்ப்யூட்டர் ஆகிறது.

இன்னும் ஆதாரமாக பார்த்தால் மண், நீர் காற்று இவைகளின் அணுக்களை ஒரு வகையில் கூட்டமைத்தால் அது உருளைக்கிழங்காகிறது!
நானோ டெக்னாலஜி இதைத்தான் முயற்சிக்கிறது. இயற்கை செய்வதை ஒரு ஆராய்ச்சிசாலையில் மனிதன் செய்ய முடியும் என்று நம்புகிறது.

அனைத்துத் துறைகளிலும் நானோ டெக்னாலஜி செயல்படுத்தப்படுகிறது. இன்றைய காலகட்டத்தில் ஐபிஎம், எக்ஸான போன்ற பெரிய கம்பெனிகள் தான் இதில் முதலீடு செய்து கொண்டு இருக்கின்றன. ஐபிஎம் கம்ப்யூட்டர் தகவல்களை சேகரிக்கும் சாதனங்களின் அடர்த்தியை அதிகரிப்பது நானோடெக் மூலம் சாத்தியம் என்று நம்பி செலவழிக்கிறது.

எக்ஸான் போன்ற கம்பெனிகள் பெட்ரோலியத் தயாரிப்பில் பயன்படும் "காட்டலிஸ்ட்" ஊக்கிகளை நானோ டெக் மூலம் தயாரிப்பதில் கவனம் செலுத்துகிறது. "கார்பன் நானோடெக்" போன்ற சிறு நிறுவனங்கள் கார்பன் நானோடியூப் களை தாயாரிப்பதில் முதலீடு செய்திருக்கின்றன.

இது தவிர மருத்துவம், மருத்துவ சாதனங்கள், பார்மஸி அனைத்து வகை உடற் கூறியல் இப்பட பலர் இதில் முதலீடு செய்துள்ளனர்.

வரும் காலங்களில் நானோ தொழில்நுட்பம் மூலம் வெளிப்படும் சாத்தியங்கள் மனிதனை கடவுளுக்கு அருகில் கொண்டு செல்கின்றன என்றால் அது மிகையல்ல! 

பின்குறிப்பு - இதில் பதிவிட்ட தகவல்கள் அணைத்தும் இணையத்தளத்தில் இருந்து சேகரிக்கப்பட்டவை. இனி வரும் காலங்களில் காணொலிகளுக்காக இத்தகவல்களை ஆய்வுக்கு உட்படுத்தும் போது குறிப்புகளில் மாற்றங்கள் வரலாம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

Stories