கோயம்புத்தூர் மாவட்டத்தின் மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த திரு.நிஸார் அவர்கள் ஒரு பொறியாளர். அமெரிக்காவில் துறைசார்ந்த பணியில் சில ஆண்டுகள் நல்ல வருமானம் ஈட்டும் நிலையில் இருந்தாலும் தானே தாய் நாட்டில் ஒரு தொழிலை நிர்மாணிக்க வேண்டுமென்று எண்ணி வெளிநாட்டு பணியைத் துறந்து மேட்டுப்பாளையத்தில் "அக்வா போனிக்ஸ்" என்ற தொழில்நுட்பத்தின் படி மீன் வளர்ப்பு மற்றும் நீரியல் தாவர வளர்ப்பும் ஒருங்கிணைத்து செய்து வருகிறார்.
"அக்வாபோனிக்ஸ்" தொழில்நுட்பம் தற்சமயம் இந்தியாவில் பெருமளவில் பிரபலம் இல்லை என்றாலும் அமெரிக்காவிலும் பல மேலை நாடுகளிலும் பெரும் அளவில் சிறப்பாக செயலாற்றுவதைக் கண்டவர் என்பதால் திரு.நிஸார் அவர்கள் முன்னோடிகளில் ஒருவராக வெற்றிகரமாக நடத்தி வருகிறார்.
"அக்வாபோனிக்ஸ்" என்பது என்ன?
Video Link:
Part 1: https://youtu.be/my_hxpBURH4
Part 2: https://youtu.be/EK-QEa6Ff6M
"அக்வாபோனிக்ஸ்" என்பது பொதுவாக வழக்கமான மீன் வளர்ப்பும் மற்றும் அதன் கழிவுகளைக்கொண்டு நிலமில்லாமல் நீரியல் தாவர வளர்ப்பும் ஒன்றோடு ஒன்று இணைந்து செயல்படும் ஒரு தொழில்நுட்பமாகும். இத்தகைய ஒன்றிணைந்த சூழலில் நீர்வாழ் விலங்குகளான பலவகை மீன்கள், இரால்கள் வளர்க்கப்பட்டு அதனுடைய கழிவுகள் கலந்த நீரினை பயன்படுத்தி பலவகை தாவரங்கள் (அனைத்து வகையானகீரைகள், தக்காளி) முதலியவை வளர்க்கப்படுகின்றன. பொதுவாக மீன்களின் கழிவு கல் மற்றும் அதற்கு அளிக்கப்படும் எஞ்சிய உணவுகளால் நீர் நஞ்சாவது என்பது மீன் வளர்ப்பில் ஒரு முக்கியமான பிரச்சனையாகும். அதேபோல தாவரங்கள் வளர்ப்பதில் வேளாவேளைக்கு நீர் பாய்ச்சுவதும், உரம் இடுவதும் ஒரு முக்கியமான பிரச்சனை எனவே இது இரண்டையும் ஒருங்கிணைப்பதன் மூலம் இரண்டு பிரச்சினைகளும் நிவர்த்தி செய்யப்பட்டு இரண்டு வகையிலும் பலன் பெறமுடிகிறது என்பதே "அக்வா போனிக்ஸ்" தொழில்நுட்பத்தின் சிறப்பு.
மீன் தொட்டிகளும் நீர் வளர்ப்புத் தாவரங்களும் ஒன்றின்மேல் ஒன்றாக வோ அல்லது அருகிலேயே அமைப்பதன் மூலம் மீன் வளர்ப்புத் தொட்டியின் கழிவுநீர் சுழற்சி முறையில் செடி வளரும் தட்டுகளுக்கு சென்று பின் அங்கு இயற்கை முறையில் சுத்திகரிக்கப்பட்டு பின் மீண்டும் மீன் தொட்டிக்கு வரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மீன் கழிவு நீர் இரண்டு முறையில் சுத்திகரிக்கப்படுகிறது.
1. மெக்கானிக்கல் வடிகட்டுதல்
2. நுண்ணுயிர்கள் மூலம் சுத்தம் செய்தல் வடிகட்டும் டிரம்கள் மூலம் திடக்கழிவுகள் பிரித்தெடுக்கப்பட்டு அவை தாவரங்களுக்கு உணவாகும் வகையில் அனுப்பப்படுகிறது.
திரவக்கழிவுகள் நுண்ணுயிர்கள் மூலம் நைட்ரைட்டுகள் தாவரத்துக்கு தேவையான நைட்ரேட்டுகளாக மாற்றப்பட்டு தாவரங்களுக்கு அனுப்பப்படுகிறது. இந்த நிகழ்வு தொடர்ந்து நடைபெறுவதில் எப்போதும் தண்ணீர் சுத்தமாகி எப்போதும் ஆக்ஸிஜன் நிறைந்த நீர் வளரும் மீன்களுக்கு கிடைக்கிறது.
பலன் தரும் செடிகள் வளர்ப்பு வகைகள்:
1. நீர் வளர்ப்பு ( Floating Raft Water Bed) மூலமாகவும்,
2. ஜல்லிகள் கொண்ட மீடியா (Media Bed) மூலமாகவும் செயல்படுத்தப்படுகிறது.
திரு.நிஸார் அவர்களின் "நிலத்தில்" (Neelithal Aqua Farm) அக்வா பார்ம் 2014 - ஆம் ஆண்டு 5 1/2 செண்ட் பரப்பளவில் ஆரம்பிக்கப்பட்டு 2016-ம் ஆண்டிலிருந்து 50 சென்ட் அளவிற்கு விரிவாக்கம் செய்யப்பட்டு வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது.
அக்வா போனிக்ஸ் அனுகூலங்கள் (Advantages):
1. குறைந்த தண்ணீர் பயன்பாட்டில் அதிகமான மீன் மற்றும் தாவர உணவு உற்பத்தி.
2. குறைந்த இடத்தில் நிலம் பயன்பாடு இல்லாமல் மீன் மற்றும் தாவர உணவு உற்பத்தி.
3. தாவர, மீன் வளர்ச்சி விரைவு படுத்துவதால் குறைந்த கால அளவில் மீன் மற்றும் தாவர உணவு உற்பத்தி.
4. இதற்கான உபகரணங்கள் பயன்பாடு குறைவு.
5. தனிப்பட்ட சிறப்பு அறிவு கொண்டவர்கள் தேவை இல்லை. (No Need for highly skilled Labourers)
6. களை எடுப்பதும் பூச்சி மருந்துத் தெளிப்பும் தேவையில்லை.
7. நிலம், நீர், காற்று மூலமாக எந்தவித மாசும் ஏற்படுத்தப் படுவதில்லை (Pollution Free)
8. எந்தவிதமான வேதியல் உரங்கள் ( Chemical Fertilizers zero) உபயோகப்படுத்தாமல் முற்றிலும் அங்கக பொருட்களே உற்பத்தியாகிறது (100 % Organic Produce)
"அக்வாபோனிக்ஸ்" சவால்கள் (Dis advantages)
1. அமைப்பதற்கான முதலீட்டு செலவுகள் சாதாரணமாக ரு 20 லட்சம் முதல் 40 லட்சம் வரை. (Commericial Set up)
2. பசுமைக் குடில் அவசியம்.
3. தண்ணீர் சுழற்சி 24 மணி நேரமும் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
4. மின் தட்டுப்பாடு இல்லாமல் இருக்க வேண்டும்.
5. வேர்க் காய்கறிகள் (Carrot, Beetroot) போன்றவற்றை வளர்ப்பது கடினம்.
மனிதனின் தேவைகளே புதிய பல கண்டுபிடிப்புகளுக்கும் தொழில்நுட்பத்துக் ஆதாரம் என்பதன் அடிப்படையில்"அக்வாபோனிக்ஸ்" தொழில்நுட்பம் எதிர் வரும் இடத் தட்டுப்பாடு மற்றும் நீர் தட்டுப்பாடுகளை சந்தித்து செயலாற்றுவதற்கான ஒரு தொழில்நுட்பம் என்றால் மிகையில்லை.
வருமுன் காப்பவன்தான் அறிவாளி, துயர் வந்தபின்னே தவிப்பவன் தான் ஏமாளி அல்லவா?